ஸ்தல வரலாறு

பல்லவர்களும், சோழர்களும் வணங்கி, திருப்பணிகள் பல செய்து இங்குள்ள ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டுள்ளார்கள். மாமன்னன் இராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்த திருத்தலம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ்வாலயம் முற்றிலும் சிதிலமடைந்து மண்மேடாகிவிட்டது. தற்போது பக்தர்களின் முழு அர்ப்பணிப்பால் இங்கு ஸ்ரீ நிதீஸ்வரப் பெருமானுக்கும், அம்பிகைக்கும், முழுவதும் கற்கோயிலாகப் பழைமை மாறாமல் புராதனப் பெருமையுடன் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்குவோர்க்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கப்பெற்று அவர்களின் விதி புதியதாக மாற்றி எழுதப்படும் என்பதோடு அவர்களின் இல்லங்களில் வறுமை நீங்கி செல்வம் செழித்து மகிழ்ச்சி தங்கும் என்பது உண்மை.

பிரம்மன் வழிபட்ட தலம்:

“அன்னமூர்த்தி”, “அன்னவாகனன்” என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும், காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு கயிலைநாதனிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க சிவபெருமான் அடியை அல்லது முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண புறப்பட்டுத் தேடி தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் கண்டதாக பொய்யுரை கூறி நின்றார். பொய் உரைத்ததால் பிரம்மனை சிவபெருமான் அன்னமாகும்படி சபித்தார். தனக்கு ஏற்பட்ட இழுக்கு தீர பிரம்மதேவன் இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி படைப்புத் தொழிலை மேற்கொண்டார். இதனால் இத்தலத்திற்கு “அன்னம்புத்தூர்” என்ற திருநாமம் ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள பல்லவர் காலத்து விநாயகர் மிகவும் பழைமை வாய்ந்தது. இடது கையில் பாடலி கொடி ஏந்தியபடி காட்சியளிக்கின்றார் இத்தோற்றம் மிகவும் அரிதானது.

குபேரன் வழிபட்ட தலம்:

பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி மற்றும் சங்க நிதி போன்ற எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் “நிதிபதி” என்று போற்றி வணங்கப்படுபவன். தனக்கு எப்போதும் அள்ள அள்ளக் குறையாத செல்வங்களை வழங்கவேண்டும் என இத்தலத்தின் ஈசனை, குபேரன் வழிபட்டு நீங்காத செல்வம் நிலைக்கப்பெறும் பேறினைப் பெற்றதால் இறைவனுக்கு “ஸ்ரீநிதீஸ்வரர்“ எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.

Get in Touch

SRINIDHEESWARAR TEMPLE TRUST
20/21, NEW COLONY MAIN STREET, WEST SAIDAPET, CHENNAI – 600015

info@Srinidheeswarar.com / srinidheeshwarar@gmail.com

(+91) 9444036534 / 9444036532

Follow Us

பூஜா சேவாக்கு முன்பதிவு செய்ய

குருபரிகாரஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ நிதீஸ்வரர் ஆலயத்தில் குருபரிகார பூஜை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளவும்

பதிவு செய்